நாங்குநேரி அருகே பயங்கரம் நிறைமாத கர்ப்பிணி வெட்டிக்கொலை
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள தம்புபுரம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வானமாமலை மகன் முத்தையா(25). கோவையில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவரும் அதே பகுதி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த இவரது உறவினரான மாடசாமி மகள் வெங்கடேஷ்வரி(23)யும் காதலித்தனர்.முத்தையாவுக்கு வெங்கடேஷ்வரி உறவு முறையில் தங்கை என்பதால் அவரது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை மீறி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த ஆண்டு கோவையில் திருமணம் செய்து தனியாக வாழ்ந்து வந்தனர்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த வெங்கடேஷ்வரியை கடந்த ஒரு மாதத்திற்கு முன் முத்தையா சொந்த ஊருக்கு அழைத்து வந்து பெற்றோர் பராமரிப்பில் விட்டு சென்றார். நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த வெங்கடேஷ்வரியை பார்க்க அவரது அண்ணன் தளபதி (32) பழம், திண்பண்டங்களை வாங்கி கொண்டு வந்தார். கட்டிலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த வெங்கடேஷ்வரியை மறைத்து வைத்திருந்த அரிவாளால் திடீரென தளபதி சரமாரியாக ¢ வெட்டினார். அவரது அலறல் சத்தம் கேட்டு வெளியே சென்றிருந்த முத்தையாவின் தந்தை வானமாமலையும் தாய் கண்ணுத்தாயும் வீட்டுக்கு ஓடி வந்து பார்த்தபோது கையில் ரத்தம் சொட்டும் அரிவாளுடன் தளபதி வீட்டிலிருந்து வெளியேறினார். பதறிப்போன அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்ததில் வெங்கடேஷ்வரி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
வயிற்றில் இருக்கும் குழந்தையின் உயிரையாவது காப்பாற்றலாம் என்ற நம்பிக்கையில் ஆம்புலன்ஸ் மூலம் நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு வெங்கடேஷ்வரியின் உடலை எடுத்துச்சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தையும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். நாங்குநேரி டிஎஸ்பி சண்முகம், இன்ஸ்பெக்டர் சுந்தரநேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். வெங்கடேஷ்வரியின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதற்கிடையே தளபதி நாங்குநேரி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். நிறை மாதக் கர்ப்பிணியை அண்ணனே வெட்டிக்கொலை செய்த சம்பவம் நாங்குநேரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சரணடைந்த தளபதி நாங்குநேரியில் வக்கீலாக உள்ளார்.





0 comments:
Post a Comment