அம்பாரை மக்கள் ஹக்கீமை தேடினார்கள் இப்போது ஹக்கீம் அமைச்சர் மன்சூரை தேடுகிறார்
நாட்டின் எதிர்காலம் என்பது இனங்களுக்கிடையிலான ஐக்கியத்திலேயே
தங்கியிருப்பதால். எங்கள் மத்தியில் பிரச்சினைகள் ஏற்படாதவாறு மிகவும்
பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்ட ஸ்ரீ லங்கா
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம், மேலாதிக்க
வாதம் என்பது ஒரு பிரச்சினையாக இருந்த போதிலும், அதனை வெற்றி கொள்வது
எவ்வாறு என்பதை உரிய முறையில் அணுகுவதை விடுத்து குறுகிய நோக்கத்தில்
அதனைக் கையாளாமல் பெருந்தன்மையோடு சில விடயங்களை அணுக வேண்டிய அவசியம்
இருப்பதாகவும் கூறினார்.
அமைச்சர் ஹக்கீம் செவ்வாய்க்கிழமை (31) மத்திய முகாம், பிரதான வீதி
ஆலையடிச் சந்தியில் நடைபெற்ற பிரண்ட்ஸ் விளையாட்டு கழகத்தின் 5 ஆவது ஆண்டு
விழா அதன் ஸ்தாபகத் தலைவரும், முஸ்லிம் காங்கிரஸின் நாவிதன்வெளி பிரதேச
கொள்கை பரப்பு செயலாளருமான ஏ.எம். மௌருப் தலைமையில் நடைபெற்ற பொழுது பிரதம
அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனைக் குறிப்பிட்டார்.
காணிப்பிரச்சினைகள் நிறையவுள்ளன. அவ்வாறே ஏனைய வாழ்வாதார பிரச்சினைகளும்
உள்ளன. அரசியல்வாதிகளை தேடி பொது மக்கள் வர வேண்டிய நிலைமையை மாற்றி,
மக்களைத் தேடி நாங்கள் சென்று அவர்களது அவசிய தேவைகளை நிறைவு செய்ய வேண்டிய
நிலைமை ஏற்படுத்தப்படும்.
விவசாயத்துறை சம்பந்தமான ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. மாகாண
விவசாய, கால்நடை, மீன்பிடி, சுற்றாலாத்துறை அமைச்சு கூட எங்களது பொறுப்பில்
இருக்கின்றது. மாகாண சுகாதார அமைச்சும் எங்களிடமே இருக்கின்றது.
ஆனால், மாகாண சுகாதார அமைச்சர் நான் கலந்து கொள்ளும் இந்தக்
கூட்டத்திற்கு வருகை தராதது ஒரு தவறான காரியமென என்னிடம்
சுட்டிக்காட்டப்பட்டது. 5 ஆம் கொலனியில் நான் அதிதியாக கலந்து கொண்ட
இவ்வாறான ஒரு நிகழ்விலும் அவர் கலந்து கொள்ளாததை அந்த மேடையிலும்
குறிப்பிட்டார்கள்.
மத்திய முகாம் வைத்தியசாலையின் நிலைமை மிகவும் மோசமாக
இருக்கின்றதென என்னிடம் எடுத்துக் கூறப்படும் பொழுது எங்களுக்கு
வெட்கமாகவும், வேதனையாகவும் இருக்கிறது. குறைந்த பட்சம் அவர் வைத்தியசாலையை
பார்வையிட்டாவது இருக்க வேண்டும்.
எனவே அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் இந்த நடமாடும் சேவையில் மாகாண
சுகாதார அமைச்சரையும் முக்கியமாக பங்குகொள்ள வைக்க எண்ணியுள்ளேன். அதற்கான
பணிப்புரையை நான் விடுக்கவுள்ளேன்.
சில விடயங்களை சாதிப்பதானால், கட்டுக்கோப்பான நிலைக்கு இக் கட்சியை
கொண் டுவரவில்லையென்றால், மக்களின் எதிர்ப்பார்ப்புகள் எவற்றையுமே இந்தக்
கட்சியினால் தீர்க்க முடியாது என்ற மனப்பதிவு ஏற்பட்டுவிடும் ஆபத்து
நிலவுகின்றது.
நாவிதன்வெளி பிரதேச சபையின் எங்களது கட்சி உறுப்பினர்கள் இருவர்
இடம்பெற்றிருக்க வேண்டியிருந்த நிலையில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்
ஒரேயொருவரைக் கூட இந்தக் கூட்ட மேடையில் காண முடியாதிருப்பது மிகவும்
விசனிக்கத்தக்கது.
இன்று காலையில் எங்களது கட்சியின் மாவட்ட மேல் மட்ட உறுப்பினர்கள் தற்போதைய
கள நிலைவரத்தின் யதார்த்தத்தை பிரதேச சபையின் எமது உறுப்பினருக்கு
உணர்த்தினோம். சில விடயங்கள் தொடர்பில் அவர் கட்சியின் கட்டுப்பாட்டுக்கு
ஏற்ப செயல்பட வேண்டும் என சில அறிவுறுத்தல்களை அவருக்கு வழங்கினோம்.
அந்த அறிவுறுத்தல்களை மீறி நடக்கின்ற நிலைப்பாட்டில் அவர் இருக்கிறார்
என்பதை காணும் பொழுது நாங்கள் மன வேதனைப்படுகிறோம். பிரதேச அபிவிருத்தி
சம்பந்தமான விடயங்களை காரணங்களாக காட்டுவதன் மூலம் இரண்டு
இனங்களுக்கிடையிலான பிரச்சினையாக அது வந்து விடக் கூடாது.





0 comments:
Post a Comment